யாழ்ப்பாண(jaffna) மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 4 பேர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (10.12.2024) தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது, வடமராட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தார்.
அத்துடன் இது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அதற்கு அமைவாக தடுப்பு நடவடிக்கைகள் நாளை புதன்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புலோலி மற்றும் கற்கோவளம் ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பகுதியில் முதல் கட்டமாக இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் அறியத்தருமாறும் ஆளுநர் இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.