சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு

0 5

சிரியா (Syria) மக்களின் புகலிடக் கோர்க்கை விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2011 இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்த நிலையில் இது பல ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது அசாத்தின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, வன்முறையில் இருந்து தப்பி ஓடியவர்களில் பலர் நாடு திரும்பலாமா என்று யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் நிலை மிக வேகமாக மாறிவரும் சூழலில், பல நாடுகள் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தியுள்ளன.

சிரியா மக்களின் புகலிடக்கோரிக்கை : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி அறிவிப்பு | Syrian People Asylum Request
ஆஸ்திரியாவில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தற்போது சிரியா மக்களை வெளியேற்றுவது குறித்து திட்டம் வகுத்து வருகிறது.

ஆனால் பிரித்தானியா அப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்றாலும், விண்ணப்பங்களை பரிசீப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பல எண்ணிக்கையிலான சிரியா மக்கள் சொந்த நாடு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மக்களுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த நாடான ஜேர்மனி தற்போது, முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.

நோர்வே, இத்தாலி, டென்மார்க், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் சிரிய அகதிகள் மீதான முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளன.

அத்தோடு, இதேபோன்ற முடிவை விரைவில் எடுக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 2019 இல் மட்டும் பிரித்தானியாவில் 48,000 சிரியா மக்கள் வசித்து வந்தனர்.

இதில் பெரும்பாலானோர் அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் அல்ல, 2011 இல் இந்த எண்ணிக்கை வெறும் 9,200 என இருந்துள்ளதுடன் 2011 மற்றும் 2021 இற்கு இடையில், கிட்டத்தட்ட 31,000 சிரியா மக்களுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

2011 இல் வெடித்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் 14 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதுடன் அதில் சரிபாதி பேர்கள், சிரியாவின் பாதுகாப்பான பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சுமார் 5.5 மில்லியன் மக்கள் துருக்கி, லெபனான், ஈராக், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர்.

2021 இல் வெளியான தரவுகளின் அடிப்படையில் சுமார் ஒரு மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாகவும் புகலிடக்கோரிக்கையாளர்களாகவும் ஐரோப்பா நடுகளில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 59 சதவிகித சிரிய மக்களை ஜேர்மனி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 11 சதவிகித மக்களை ஸ்வீடன் ஏற்றுக்கொள்ள, எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான மக்களை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.