இந்திய அதானி நிறுவன முதலீடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

5

அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்திய அதானி நிறுவனத்துடனான, அதிகார ஒப்பந்தம் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தலின் பின்னர் அதானியின் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்வதாக, ஜனாதிபதி திஸாநாயக்கவின் அரசாங்கம் முன்னர் கூறியிருந்த நிலையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள சட்டத்தரணிகள், கௌதம் அதானி மற்றும் ஏழு பேர் மீது பல மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான வெரிடே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிசான் டி மெல், இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் கணிசமான ஊழல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றுள்ளன. ஸ்ரீலங்கன்; ஏர்லைன்ஸ் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானம் வாங்கியதில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், சில ஆண்டுகளுக்கு முன்னர்,ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட விசாரணையில் வெளிவந்தது மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்களின் பெயர்களை வெளியிட்ட பண்டோரா அறிக்கைகள் என்பவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கை ஊழலுக்கு எதிரான அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது மிகவும் முக்கியமானது, ஊழல் பேரங்களில் இருந்து, நாட்டை பாதுகாப்பது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் பூநகரியில், காற்றாலை மின் திட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இதற்கான ஒப்புதலை 2022 இல் வழங்கியதில் இருந்தே இந்த திட்டம் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.

கேள்விப்பத்திரங்களுக்கு திறந்த அழைப்பு இல்லாத நிலையில், பின்கதவு நுழைவு என்று பிரதான எதிர்க்கட்சியும் அதானி நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

இதேவேளை இந்த நிறுவனத்தின் மீதான அமெரிக்க குற்றச்சாட்டு, இலங்கையில் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான, தேசிய மக்கள் சக்தியின் வாதத்தை இப்போது பலப்படுத்துகிறது என்று கருத்தையும், கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதாரத்துறை இணையத்தை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.