பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்தது யார்? இஸ்ரேலிய பிரதமர் சொன்ன உண்மை

5

லெபனானின் மீதான பேஜர் தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது.

இதையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரையும் குறிவைத்து இஸ்ரேல் தங்களது தாக்குதலை தொடங்கியது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18ம் திகதிகளில் லெபனானில் உள்ள பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.

இதில் 40 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 3000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொழில்நுட்ப ரீதியான தாக்குதலை இஸ்ரேல் தான் முன்னெடுத்து இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி இருந்தது, ஆனால் இதற்கு அப்போது இஸ்ரேல் மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்வதற்கான உத்தரவை வழங்கியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.

“மனித குலத்திற்கு எதிராகவும், தொழில்நுட்பத்திற்கு எதிராகவும் இஸ்ரேல் பயங்கரமான போரை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டு” பேஜர் தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனத்திடம் புகார் அளித்து இருந்தது.

இந்த புகார் அளிப்பட்ட சில நாட்களில் பேஜர் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் ஓமர் டோஸ்டரி வழங்கிய தகவலில், பெஞ்சமின் நெதன்யாகு தான் லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பச்சை கொடி காட்டியது என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.