யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (07.06.2024) இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக பல வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நடவடிக்கையில் கு.சிந்துஜா என்பவரது வீடும் சோதனையிடப்பட்டுள்ள போது, அங்கு கசிப்போ அல்லது வேறு எந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன்போது, பொலிஸார் ஆய்வுகளை நடாத்திக் கொண்டிருந்த போது, குறித்த பெண் தனது தொலைபேசியால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்த பெண்ணிடமிருந்து தொலைபேசியை பறித்ததுடன் அவரின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.