பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார்: உருவாகியுள்ள உரசல்

10

பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார் கைது செய்துள்ள விடயம் இருதரப்புக்கும் இடையில் உரசலை உருவாக்கியுள்ளது.

ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த தேவாலயம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், காசா போர் நிறுத்தம் மற்றும் லெபனான் பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணுதல் ஆகிய விடயங்களுக்காக இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் (Jean-Noël Barrot) இஸ்ரேல் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, நேற்று, பாரட் அந்த தேவாலயத்துக்கு செல்வதாக இருந்தது. ஆனால், ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார், அந்த தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

அமைச்சர் பாரட் தலையிட்டபிறகே அந்த தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த தேவாலயத்துக்குச் செல்லும் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் பாரட்.

இந்த சம்பவம் இருதரப்புக்கும் இடையே உரசலை உருவாக்கியுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து அமைச்சர் பாரட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பிரான்சுக்கான இஸ்ரேல் தூதருக்கும் சம்மன் அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

Comments are closed.