தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்ததால் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மூத்த போராளி காக்கா அண்ணன், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கும் தேவையையும் வலியறுத்தியதுடன், தனது கருத்துக்களைத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சுமந்திரன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ஆகியோர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்துள்ள நிலையில் இக் கலந்துரையாடல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருன் தம்பிமுத்து, மூத்த போராளி யோகன் பாதர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜன் மற்றும் மூத்த போராளி காக்கா அண்ணன் ஆகியோருடன் மற்றும் பல முன்னாள் போராளிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களும் அருண் தம்பிமுத்து தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர்களும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
Comments are closed.