தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது உறுதி : பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் முன்னிலையில் சிறீதரன் எடுத்துரைப்பு

12

எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருக்கின்றார் என்று சிறீதரன் எம்.பி. அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி இலண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறீதரன் எம்.பி அங்கு முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் உள்ளடங்களாக பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் ஓரங்கமாக இரு தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி., “ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன்.

எனது அரசியல் பயணத்தையும், அது சார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இறுதி வரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்.” – என்று தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் தான் உறுதியாக இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.