மக்களை லெபனானை விட்டு வெளியேற வலியுறுத்தும் பிரித்தானியா

15

லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமடையலாம் என பிரித்தானியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரித்தானிய குடிமக்கள் உடனடியாக லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வருடம் 2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி அத்துமீறலை அடுத்து, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது போர் பிரகடனம் செய்தது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் மிக மோசமான தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,500 கடந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பகுதிகள் வெறும் குப்பை மேடாக மாறியுள்ளதுடன் அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் பலமுறை இடம்பெயரும் மிக நெருக்கடியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உணவு, மருந்து உட்பட அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அக்டோபர் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் எல்லையில் லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதனால் பதட்டமான சூழலே தற்போது நிலவுகின்ற நிலையில் இது எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா படைகள் தாக்குதலை முன்னெடுக்க நேரிட்டால், அங்குள்ள மொத்த பிரித்தானிய மக்களையும் அரசாங்கத்தால் வெளியேற்ற முடியாமல் போகலாம்.

அத்துடன், பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தானிய மக்கள் உடனடியாக லெபனானில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே தமது கோரிக்கை என வெளிவிவகார அமைச்சர் David Lammy தெரிவித்துள்ளார்.

Comments are closed.