சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 83 இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தண்டனைக்கு உட்படுத்துள்ளதாகவும், 169 இந்திய மீன்பிடி கப்பல்கள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 80 கடற்றொழிலாளர்கள் மற்றும் 173 மீன்பிடி படகுகளை விடுவிக்கக்கோரி 2024 ஜூலை 11 ஆம் திகதியன்று அனுப்பப்பட்ட தமிழக முதல்வரின் கடிதம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன், இராஜதந்திர வழிகள் மூலம் இலங்கையில் உள்ள உயர் ஸ்தானிகரகம் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை, 1974ஆம் ஆண்டு அப்போதைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வினால் தோற்றம் பெற்றது.
எனினும் தற்போதைய மத்திய அரசு மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார அக்கறைகளை முதன்மையாகக் கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வை எதிர்பார்க்கிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.