ஜனாதிபதியின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு சட்டத்தரணி கொடுத்த விளக்கம்

7

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிக்கும் நடவடிக்கையை எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 19வது அரசியலமைப்பு சட்டத்தின் 83வது சரத்தை திருத்தத் தவறியமை, அனுபவமின்மையால் ஜயம்பதி விக்கிரமரத்ன செய்த பிழையாகும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,19வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது, ​​ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டது.

இருப்பினும், குறித்த பதவிக் காலத்தினை அதிகரிக்க கூடிய 6 வருட அதிகப்பட்ச மாற்றத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படாமைக்கான காரணம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் என்பதால் ஆகும்.

திருத்தச் செயல்பாட்டின் போது தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு வரைவும் அமைச்சரவை உப குழுவுடன் கலந்துரையாடப்பட்டதுடன் உப குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி வரைவை சட்ட வரைவுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபரை பல தடவைகள் அழைத்து இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டின் காரணமாக சட்டமூலத்தில் பல மாற்றங்களைச் செய்தார்.

இதன்படி, 19வது திருத்தச் சட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர், எந்தவொரு விதிமுறைகளுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.