வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டால் அரசாங்கம் நட்டம் அடையும் எனவும் இதனால் மாதச்சம்பளங்களை குறைக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழந்தால் மாதாந்த சம்பள கொடுப்பனவுகளில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதாந்த சம்பளக்கொடுப்பனவுகள் தானாகவே குறையும் எனவும், எந்தவொரு தரப்பேனும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இந்த போராட்டங்களை முன்னெடுத்தால், அவ்வாறு ஆட்சியை பிடிப்போரினாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்பொழுது மத்திய வங்கியினால் இவ்வாறு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவ்வாறு அச்சிட்டால் உலக நாடுகள் இலங்கையை கைவிட்டு விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களின் ஊடாக நாளாந்தம் திரட்டும் பணத்தைக் கொண்டே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.