சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு

15

இலங்கையை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய குற்றவாளிகள் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவதே நாட்டு மக்களுக்கான சிறந்த நற்செய்தி என சிறிலங்கா ராமஞ்ஞ பீடத்தின் பிரதம சங்கநாயக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்காதிருப்பதாக ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நற்செய்தி என கூறி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக அவர் கோடி கணக்கில் செலவழித்திருப்பார்.

இவ்வாறாக அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டதன் பின்னர் மக்களுக்கு நற்செய்தி கிடைக்குமென அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தோம்.

எனினும், எதிர்ப்பார்த்ததை போன்று எந்தவொரு நற்செய்தியும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மாத்திரமே அவர் பேசியிருந்தார்.

கடன்களை மீள செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரணில் கூறியிருந்தார். எவ்வாறாயினும், இலங்கை மீள செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்து மாத்திரமே உள்ளது.

இந்த நிலையில், கடனை மீள செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டதையே சிறிலங்கா அதிபர் நற்செய்தியாக கருதுகிறார்.

சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது 80 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட கடன், தற்போது 100 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இதனையும் நற்செய்தியாக கருதவே முடியாது. இலங்கையை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினர் யார் என்பதை நீதிமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதன் படி, யார் நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது என்பது தொடர்பில் தனியொரு விசாரணை முன்னெடுக்கப்பட தேவையில்லை. சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாத்திரமே தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இலங்கை மக்களுக்கான நற்செய்தி. இதையே மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.” என கூறியுள்ளார்.

Comments are closed.