இலங்கைக்கு 46 கிலோ கிராம் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் பிரித்தானிய யுவதி தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. அதேநேரம் இந்த செய்தி உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த அவரின் இரண்டு பயணப்பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள், கடந்த 12ம் திகதியன்று கைப்பற்றப்பட்டன.
எனினும் இந்த போதைப்பொருள், தமது பயணப்பொதியில் வைக்கப்பட்டமை தமக்கு தெரியாது என்று குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தாம் குறித்த பயணப்பொதியில் தேவையான பொருட்களை எடுத்து வைத்ததாக குறிப்பிட்ட அவர், இறுதியாக புறப்படுவதற்கு முன்னர், குறித்த பொதிகளை பரிசோதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போதைப்பொருட்களை யார் தமது பயணப்பொதிகளில் வைத்திருப்பார்கள் என்பது தம்மால் ஊகிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அதே நாளன்று, தாய்லாந்தில் இருந்து ஜோர்ஜியாவுக்கு சென்ற மற்றுமொரு பிரித்தானிய யுவதியிடம் இருந்து அந்த நாட்டின் அதிகாரிகள் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.