போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து மீள் எழுப்பப்படும் ஓபரேஷன் சிந்தூர் விவகாரம்.. இந்திய அரசியல் தரப்பின் கோரிக்கை
இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் ஓபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஓபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதன்முதலில் அறிவித்த இன்றைய போர்நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம் என ராகுல் காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் காந்தி பதிவு செய்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், ஓபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தும் அரசாங்கம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
முக்கியமான இந்த இரண்டு கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு கூட்டங்களிலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை உறுதியளித்தன.
இந்தியா – பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் முன்னேற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகரா செயலாளர் மார்கோ ரூபியோ போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த இரு அறிவிப்புகளுக்கும் பின்னர், சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி போர் நிறுத்தம் தொடர்பில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்தார்.