தமிழர் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிய இராணுவச் சோதனைச் சாவடி தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

15

மன்னார் (Mannar) மாவட்டம் பிரதான பாலத்தடியில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனைச் சாவடி முதன் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனைச் சாவடி இன்றையதினம் (21.06.2024) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாக இந்த சோதனைச் சாவடியை அகற்றுமாறும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனைச் சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஜனாதிபதியிடம் குறித்த சோதனைச் சாவடியை அகற்றித் தருமாறு நேரடி கோரிக்கையை முன்வைத்தார்.

அதனையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த பாலப் பகுதியில் காணப்பட்ட வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன.

எனினும், அப்பகுதியில் இராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டுள்ளதுடன் இராணுவக் கட்டுமானங்கள் எவையும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக அந்தப் பகுதியில் இந்த சோதனைச் சாவடி இருந்து வந்துள்ளது.

மன்னார் பகுதிக்குள் இந்த சோனைச் சாவடி அமைந்துள்ளதன் காரணமாக, சோதனைச் சாவடியுடனான பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். அத்துடன் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதன் காரணமாக மக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.