நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மியன்மார் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட வைத்தியக் குழுவை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே சுகாதார அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மியன்மாருக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள், அதேபோல் தேவையான மற்ற பொருட்களை வழங்குவதற்கு இப்போது அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கைகளை தயார் செய்து வருகிறது.
அதேபோல், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய உதவி தேவைப்படுகிறது.
அதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்திய நிபுணவர்கள் சிலருடன் செவிலியர் சுகாதாரக் குழுவை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளோம்.
இதனை நாங்கள் விசேட நடவடிக்கைகள் அமைச்சு மூலம் மியன்மார் தூதரகத்திற்கு தெரிவித்தோம். அவர்கள், தயாராக வைத்திருக்குமாறு கூறினார்கள்.
தேவை ஏற்பட்டவுடன் அதனை உடனடியாக தெரிவிப்பதாக கூறினார்கள்.அதன்படி, செய்தி வரும் வரை தேவையான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.