முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா உள்ளிட்டோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையை நீக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று மைத்திரிபால சிரிசேன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போது அவர் இதனை குறி்ப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இந்நாட்டின் முன்னாள் இராணுவத்தளபதிகள் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளது.
அதனை நீக்கிக் கொள்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தடைவிதிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதில் இந்நாட்டின் ஆட்புல ஒருமை, இறைமை என்பவற்றைப் பாதுகாப்பதற்காக போரிட்டவர்கள். அவர்கள் ஒருபோதும் சிவிலியன்களைப் படுகொலை செய்யவில்லை.
வன்னிப் போரின் கடைசி இரண்டு வாரங்கள் அனைவருக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும். நாங்கள் ஒன்றும் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்தவர்கள் அல்லர். நான் ஐந்து தடவைகள் பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.
அந்த வகையில் கடைசி இரண்டு வாரங்களில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் இராணுவத் தளபதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது மிகவும் அநீதியானது.
அவர்கள் நாட்டுக்காக தங்களை தியாகம் செய்தவர்கள். எங்களது இராணுவத்தில் பல்லாயிரம் பேர் நாட்டுக்காக தங்கள் உயிர்களையும் தியாகம் செய்துள்ளார்கள்.
எங்கள் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக மட்டும் சதி செய்யப்பட்டு, அவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து நான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த பயணத்தடையை நீக்க தற்போதைக்கு அதிகாரத்தில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.