தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னகோனை, பதவி நீக்கக் கோரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒரு விசாரணைக் குழுவின் அவசியத்தை, மனித உரிமை ஆர்வலர் – சட்டத்தரணி பிரதிபா மகாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை விளக்கிய பேராசிரியர் மகாநாமஹேவா, பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.
இந்தக் குழு முதன்மையாக தலைமை நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்டு, அதில் ஒரு பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதியரசர், தேசிய பொலிஸ் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி ஆகியோர் உள்ளடக்கப்படவேண்டும்.
அவர்கள் முன்மொழிவின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஒரு பரிந்துரையை வழங்கிய பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் இந்தநிலையில், தற்போதுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னகோனை நீக்கக் கோரும் பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது.
115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தப் பிரேரணையில், பொலிஸ் அதிபருக்கு எதிராக 27 ஊழல் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தப்பிரேரணையை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தென்னக்கோன், இந்த வழக்கில் ஈடுபட்டதற்காக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, தென்னக்கோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.