ரணிலை எதிர்க்க முடியாத நிலையில் ஜே.வி.பி : சஜித் அணி பகிரங்கம்

0 6

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இலக்கு வைக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. ஆனால், தற்போது அந்தப் பொறியில் ஜே.வி.பி.யே சிக்கிக் கொண்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “கடந்த தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றியை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது.

அன்று வழங்கிய வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படாமலுள்ள நிலையில் தற்போது இந்தத் தேர்தலை இலக்காகக் கொண்டு மீண்டும் பொய்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையர்களைக் கைது செய்ய முடியாது என்றும் அரச தரப்பினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

நாட்டு மக்கள் அந்தளவுக்கு முட்டாள்களா? நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் நாடாளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. மாறாக பிரதேச சபைகளின் ஊடாக அல்ல.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியடைந்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு, ஏமாறுமளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் அரசுக்கு மக்கள் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பார்கள். 159 தேசிய மக்கள் சக்தியின் ஆசனங்களால் நாடாளுமன்றம் நிரப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு மக்கள் ஆணையை வழங்கியும் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இலக்கு வைக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. ஆனால், தற்போது அந்தப் பொறியில் ஜே.வி.பி.யே சிக்கிக் கொண்டது.

1980களில் ஜே.வி.பி. செய்த மனிதப் படுகொலைகள், ஏற்படுத்திய கலவரங்கள் இன்று பேசுபொருளாகியுள்ளன. இதனால் கடந்த தேர்தல்களில் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

எனவே, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இவர்களால் எதுவும் செய்ய முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.