எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0 9

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தரவு அல்லது தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிறுவனங்களின் உரிமையை உத்தரவாதம் செய்யும் வரை, எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ப்ரோட்பேண்ட் சேவைகள் இலங்கையில் நிறுத்தி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  2024 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு, நாட்டிற்கு செயற்கைக்கோள் ப்ரோட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது.

அந்த நேரத்தில் இலங்கையின் நாடாளுமன்றம் ஒரு புதிய தொலைத்தொடர்பு சட்டமூலத்தையும் நிறைவேற்றியது. இது 28 ஆண்டுகளில் முதல் முறையாக தொடர்புடைய சட்டத்தில் திருத்தமாக கருதப்பட்டது.

அத்துடன் ஸ்டார்லிங்க் நாட்டிற்குள் நுழைவதற்கும் வழி வகுத்தது. இதனையடுத்து, மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், மார்ச் 2024 இல் இலங்கையில் செயல்பாடுகளை அமைப்பதற்கான ஒரு திட்டத்துடன் அணுகியது.

இதன்படி, அரசாங்கத்தின் கீழ், ‘ஸ்டார்லிங்க்’ லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படும் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் ப்ரோராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத் திட்டங்களையும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

மாதத்திற்கு 9,200 ரூபாய் முதல் 1.8 மில்லியன் ருபாய் வரையிலான ஐந்து ‘ஸ்டார்லிங்க்’ தொகுப்புகளுக்கு, ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எனினும், தேவை ஏற்பட்டால், ஸ்டார்லிங்க் தரவுகளை சட்டப்பூர்வமாக இடைமறிக்க அல்லது தகவல் தொடர்பு விபரங்களை அணுகுவதற்கான உரிமையை உறுதி செய்த பின்னரே, அதன் சேவைகள் செயல்பட முடியும் என்று தகவல் தொழில்நுட்ப பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

உரிமம் முதலில் வழங்கப்பட்டபோது இந்த வசதிக்கான எந்த ஏற்பாடுகளும் உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

சில தனிநபர்களால் எந்தவொரு சட்டவிரோத செயலுக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம்.

எனவே சட்ட நடவடிக்கைக்காக அத்தகைய தகவல் தொடர்பு தொடர்பான தரவைப் பெற இலங்கை பாதுகாப்பு பொறிமுறைக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 இந்த நிலையில், விவாதம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விடயத்தில் ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.