சர்வதேச புவிசார் நகர்வுகளில் இலங்கையின் அமைவிடமும் பொருளாதார தேவைப்பாடும் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக காணப்படுகின்றது.
இதில் தன்னை உயர்ந்தவராக உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முனைப்பு காட்டும் வல்லரசுகளின் இலங்கை தொடர்பான காய்நகர்த்தல்கள் என்பது கவணிக்கத்தக்க ஒன்றாக அமைகிறது.
இதில் இலங்கைமீது தற்போது தமது பார்வைகளை திருப்பியுள்ள வள்ளரசுகளாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா காணப்படுகின்றன.
இதில் இலங்கையின் பாதுகாப்பில் குறித்த மூன்று நாடுகளும் தனது கவனத்தை செலுத்தினாலும், அமெரிக்காவின் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கு அமைவாகவே அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்த அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவின் திட்டமிடல்கள் கவனிக்கதக்கதாய் உள்ளன.
அமெரிக்காவை பொருத்தமட்டில் இலங்கை என்பது அவர்களுக்கு இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கியமான கடல்சார் சொத்து.
இதற்கு காரணம் சீனாவுடனான பொருளாதார போட்டி நிலையில் அவர்களின் இருப்புக்கு சவால்விடும் தளமொன்றை அமைக்க சிறந்த இடமாக இலங்கையை அமெரிக்கா கருதுகிறது.
சாமுவேல் பப்பாரோவின் கருத்துக்களை சற்று ஆராய்ந்தால், அவை இந்தோ பசுபிக்கில் இலங்கையை உள்ளிலுக்கும் கருத்தாடல்களின் கோர்வையாக காணப்பட்டன.
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதாகவும் சில கருத்துக்களை இலங்கையுடன் விவாதித்த அமெரிக்க பிரதிநிதியின் நோக்கங்கள், இந்தோ – பசுபிக் கூட்டணியில் இலங்கையை நிலையாக்கும் செயற்பாடுக்கான அழைப்பாக கருதப்பட்டது.
சீனாவின் வளர்ந்து வரும் இருப்பை எதிர்கொள்ள இந்தோ-பசிபிக் கூட்டணி பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளமையை எடுத்துகாட்டுகிறது.
இலங்கையை பொருத்தமட்டில் சர்வதேச உறவுகளுடன் நடுநிலையான போக்கை இதுவரை காலமும் கையாண்டு வருகிறது.
அமெரிக்க பிரதிநிதியின் செய்தி, “நாங்கள் பாதுகாப்பு, மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குவோம்.
நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிநவீன ரேடார் அமைப்புகள் மற்றும் பல்வேறு கடற்படை சொத்துக்களை இலங்கையின் பாதுகாப்பு திட்டங்களுக்கு வழங்கி வழுசேர்க்க விரும்புகிறோம்.
மேலும், இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட அமைப்புக்கள் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் இலங்கையின் இறையாண்மையை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்பதை எடுத்துக்காட்டியிருந்தது.
எனினும் இலங்கையின் பிடிப்பு என்றும் எளிதாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை இங்கு விலங்கிக்கொள்ளவேண்டும் .
தற்போது சர்வதேசத்தின் பொருளாதார திட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் இலங்கை வெளிநாட்டு இராணுவ இருப்பை, அதாவது அந்நிய நாட்டின் பாதுகாப்பு இருப்பை ஏற்க மறுக்கிறது.
பாதுகாப்பு மூலோபாயங்களில் அமெரிக்கா தலையிட நினைத்தாலும், இலங்கைக்குள் இருக்கும் சீனாவின் பொருளாதார வகிப்பகங்கள் அவற்றுக்கு சவால் விடும் சக்திகளாகும்.
உதாரணமாக சீனாவின் முக்கிய திட்டங்களான கொழும்பு துறைமுக நகரம், மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பன சீனாவின் செல்வாக்கு இலங்கையில் எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துகாட்டுகிறது.
தற்போதைய இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள “திறந்த கடல் கொள்கைக்கான இலங்கையின் உறுதிப்பாடு” என்பது இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு ஒரு சவாலன நிலையாக கருதப்படுகிறது.
முன்னைய அரசாங்கம் சீன ஆய்வு கப்பல்களை இலங்கைக்குள்ள அனுமதிப்தை மறுத்திருந்தன.
இது இந்தியாவிடம் பெரும் வரவேற்க்கப்பட்ட விடயமாகியது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் திட்டம், அதற்கு முற்றுமுழுதாக வேறுபட்டதாய் உள்ளது.
உலகளாவிய கடற்படை மூலோபாயத்தில் ஒரு முக்கிய பங்காளியாக இலங்கையின் பங்கை வலுப்படுத்துதல் என்பது அமெரிக்காவுக்கான முக்கிய இலக்கு.
அதிகரித்து வரும் துருவமுனைப்புள்ள இந்தோ-பசிபிக் பகுதியில் நடுநிலை நிலைப்பாட்டைப் பராமரிப்பது இலங்கைக்கு தற்போதுள்ள பாரிய சவால்களில் ஒன்று.
குறிப்பாக இந்தியாவும், இலங்கையில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது உதவ 4 பில்லியன் கடன் வசதியை வழங்கியது. இது இலங்கையில் மீதான இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளது.
ஆனால் பிராந்தியத்தில் சீனா மற்றும் அமெரிக்க அபிலாஷைகள் குறித்து இந்தியாவும் எச்சரிக்கையாக உள்ளது. இலங்கையின் பாதுகாப்பை இந்தியா ஆழமாக கவணித்து வருகிறது.
ஒரு நுட்பமான சமநிலைச் சட்டத்தில் இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.
அதன் மூலோபாய இருப்பிடம் இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு மதிப்புமிக்க பகுதியாக அமைகிறது.
ஆனால் பரந்த அதிகாரப் போராட்டத்தில் பகடைக்காயாக மாறுவதைத் தவிர்க்க அது கவனமாக நடக்க வேண்டும்.
இந்த அணுகுமுறைக்கு விரோதத்தைத் தூண்டாமல் போட்டியிடும் நலன்களை சமநிலைப்படுத்த விதிவிலக்கான இராஜதந்திர திறன் தேவைப்படும்.
வளர்ந்து வரும் இந்தோ-பசிபிக் நிலப்பரப்பில், இந்த சமநிலைப்படுத்தும் செயல் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக இருக்கும்.
இந்த சிக்கலான புவிசார் அரசியல் சூழலை இலங்கை வெற்றிகரமாகக் கையாண்டால், அதன் மூலோபாய இருப்பிடத்தை ஒரு பொருளாதார சொத்தாக மாற்ற முடியும்.