பண்டிகைக் காலத்தில் அஸ்வெசும கொடுப்பனவுக்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கும் உணவுப்பொருள் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான இன்றைய(19.03.2025) குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பண்டிகைக் காலத்தில் உணவுப்பொருள் பொதிகளை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதி 1500 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதேநேரம், நாம் 5000 ரூபாய் பொதியொன்றை 2500 ரூபாவுக்கு வழங்கவுள்ளோம்.
அந்தவகையில், அஸ்வெசுமவிற்காக எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் விண்ணப்பதாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்குவோம். அதற்காக லங்கா சதொச நிறுவன வழங்குனர்களிடம் விலை மனு கோரி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாட்டரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின்மீன், சிவப்பு சீனி, கோதுமை மா, சமபோஷா மற்றும் சோயா உள்ளிட்ட 15 – 17 கிலோ கிராம் எடையுடைய உணவுப் பொருள் பொதியொன்றை நாங்கள் வழங்குவோம்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.