தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும்,
“ஜெனிவா தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில், முதலாவது அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த மிகப்பெரிய சர்வதேச மேடையாக உள்ளது.
ஒருவகையில், ஜெனிவா, தமிழ் மக்களுக்காக சர்வதேசம் அமைத்துக் கொடுத்த மேடை எனலாம். ஜெனிவா கூட்டங்களின் போது முழு உலகத்தின் கவனமும் ஜெனிவா பக்கம் திரும்பியிருக்கும்.
தேசிய பிரச்சினை சாராம்சத்தில் சர்வதேசப் பிரச்சினை என்ற வகையில் ஜெனிவா இந்த இடத்தில் பெரிய பங்கினை தமிழ் அரசியலில் வகிக்கின்றது.
இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் தற்போது சர்வதேசத்தின் அவதானத்தை பெற்றுள்ளது என அது கூறியிருக்கின்றது. ஜெனிவா தமிழ்த்தரப்பு சர்வதேச ரீதியாக உறவுகளைப் பலப்படுத்த உதவுகின்றது.
நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் என உறவுகளையும் தொடர்புகளையும் வலுப்படுத்த உதவுகின்றது. சர்வதேச மயப்படுத்தலுக்கு தொடர்புகள் மிகவும் அவசியமானவையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.