2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் நல்ல பல பொருளாதார திட்டங்களை அபிவிருத்தி செய்ய இலக்காக கொண்டாலும் அதனை நடைமுறைப்படுத்த உள்ள திட்டம் சரியில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனடபோது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீடானது, பொருளியல் மாற்றம், எண்ம மயமாக்கல் சமூக நலன் விரிவாக்கம் முதலியவற்றை இலக்குகளாகக் கொண்ட பல நல்ல திட்டங்களை முன்வைக்கிறது.
எனினும், இந்த முன்மொழிவுகளில் பல அவற்றின் செயல்படுத்தும் உத்திகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் பற்றிய தெளிவைக் கொண்டிருக்கவில்லை.
பொதுமக்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தெளிவான புரிதலை அளிக்கும் பொருட்டாக இந்த முன்முயற்சிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றி அரசு விரிவான விளக்கம் அளிப்பதானது நன்மை பயக்கும்.
முதன்மையான துறை ஒவ்வொன்றின் கீழும் நேரான கூறுகள் மறையான கூறுகள், அறைகூவல்கள் மற்றும் பரிந்துரைகளை இவ்விடத்தில் பார்ப்பது பொருத்தமானது என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.