“இன்றைய அரசாங்கத்தின் முக்கிய பணி எனது குடும்பத்தினரைக் குற்றம் சாட்டுவதாகும், நாளை நான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை” என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) நேற்று (22) காலை களுத்துறையில் தெரிவித்தார்.
களுத்துறையில்(kalutara) உள்ள வரலாற்று சிறப்புமிக்க போதி மரத்திற்கு அருகில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் “கிராமத்திற்கு கிராமம்” களுத்துறை மாவட்ட நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த நாமல் ராஜபக்ச,
“தேசிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும். “நாங்கள் எங்கள் “கிராமத்திற்கு கிராமம்” திட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் சென்று கட்சியைச் சுற்றி மக்களை ஒன்றிணைக்கிறோம்.வரவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு கிராமங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நல்ல வேட்பாளர் குழுவை முன்வைப்போம் என்று நம்புகிறோம்.”
அன்று, நாம் தினமும் செய்திகளைப் பார்த்தபோது, நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள், அடிக்கல் நாட்டுதல், பதவியேற்பு விழாக்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். இன்று, செய்திகளைப் பார்க்கும்போது, மக்கள் பயப்படுகிறார்கள். வளர்ச்சிக்குப் பதிலாக, துப்பாக்கிச் சூட்டைப் பார்க்கிறோம். அன்று, நாடு முழுவதும் வேலை செய்யும் இடமாக மாறியிருந்தது. இன்று, மக்கள் மரண பயத்தை உணர்கிறார்கள்.
கடந்த காலத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத வடிவத்தை ஒழிப்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்.”இந்த அரசாங்கம் செய்வதெல்லாம் முந்தைய அரசாங்கங்களை விமர்சிப்பதுதான்.”என்றார்
இந்நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் வர்ணகுமார, சஞ்சீவ எதிரிமன்ன, ஜயந்த கெட்டகொட, காமினி லொக்குகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்ன சஞ்சீவ, உபாலி கொடிகார மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் யோஹான் வடுகே ஆகியோர் கலந்து கொண்டனர்.