தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு தீர்வு கிட்டாது: அடித்துக் கூறும் தமிழ் தரப்பு

0 6

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கு தெரியாமல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது அடாத்தாக பிடித்து விகாரை அமைத்துள்ளனர்.

சிலர் இப்போது கேட்கிறார்கள் விகாரை கட்டும் வரை எங்கிருந்தீர்கள் ஏன் அப்போது தடுக்கவில்லை என. விகாரை கட்டுவது யாருக்கும் தெரியாமல் இருந்தது மக்களுடைய காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் யாரையும் உள்நுழைய விடவில்லை.

விகாரையின் கட்டுமானங்கள் இடம்பெற்று கொண்டிருந்தபோது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல்களில் முறையாக பேசப்பட்டது கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது.

அதனையும் மீறி அரச படைகளின் பாதுகாப்புடன் குறித்த விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

இன்னும் சிலர் கேட்கிறார்கள் தனியாருடைய காணிகள் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு போடவில்லை என்கிறார்கள்.

குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்ட போது நீதி கேட்டு நீதி கிடைக்கும் என நீதிமன்றம் சென்றோம் நீதிமன்றம். தடை உத்தரவை வழங்கியதையும் மீறி விகாரை கட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது போராட்டமே வழி என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.