கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம்: முக்கிய தகவல்

15

கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கத் திருட்டு சம்பவம் என அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய வம்சாவளியினர் ஒருவர் சரணடைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.

சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது. ஆக மொத்தத்தில், யாரோ சிலர் 400 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளையும் 2 மில்லியன் டொலர்கள் பணத்தையும் பட்டப்பகலில் ஏமாற்றுவேலை செய்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.

இந்த வழக்கில் தொடர்புடைய இந்திய வம்சாவளியினர் ஒருவர் தற்போது பொலிசில் சரணடைய முடிவு செய்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஏர் கனடா நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவந்தவரான சிம்ரன் ப்ரீத் பனேசர் (Simran Preet Panesar, 31) என்னும் அந்த நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், கனடாவின் நீதித்துறை மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் சிம்ரன் சரணடைய முடிவு செய்துள்ளதாக அவரது சட்டத்தரணியான Greg Lafontaine என்பவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.