நெல்லுக்கான உத்தேச விலை உடனடியாக நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன( Namal Karunarathna) அறிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – பன்னேகமுவ பிரதேசத்தில் உள்ள சதொச அரிசி களஞ்சியசாலை மற்றும் ஆலையை நேற்று (17) அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நெல் களஞ்சியசாலைகளை சீர்செய்வதற்கு பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் நிதி அமைச்சினால் நடத்தப்படும் அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ உபுல்தெனிய தானிய களஞ்சியசாலைகளை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இங்கு சுமார் 5000 மெற்றிக் தொன் அரிசியை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.