இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி தலைமையில் நேற்று (12) இடம்பெற்றது.
இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் வேறு துறைமுகங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, ஒருகொடவத்த மற்றும் பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளின் இரு பக்கங்களிலும், கொள்கலன் தாங்கி ஊர்திகள் நீண்ட வரிசையில் தரிக்கப்பட்டுள்ளன.
கொள்கலன் பரிசோதனையில் சுங்கத் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசேட சோதனை நடவடிக்கைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக துறைமுக வளாகத்தில் பல கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கி கிடப்படதாக கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்கத்துறையிலிருந்து நாளாந்தம் ஆயிரத்து 800 கொள்கலன்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், தற்போது நாளாந்தம் சுமார் 700 கொள்கலன்கள் மாத்திரமே விடுவிக்கப்படுவதாகவும் கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணாக நாளாந்தம் சுமார் 600 கொள்கலன்கள் சுங்கச் சாவடிகளில் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுங்கச் சோதனைகள் தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு பிரதான காரணம் என குறித்த கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறையினர் விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களைக் கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
Comments are closed.