ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்த இரண்டு வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வடகொரியா தமது படைகளை அனுப்பியிருந்தது.
உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தரவுகளுக்கமைய ஏறத்தாழ, 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு வட கொரிய வீரர்களை சிறைபிடித்ததாக கூறும் உக்ரைன் ஜனாதிபதி, முதன்முறையாக வடகொரிய வீரர்கள் உக்ரைனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், போரின் போது, கைது செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகளும் வடகொரிய வீரர்களுக்கும் வழங்கப்படும் என ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும், உக்ரைன் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புக்கள் தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.