அம்பாறையில் இலஞ்சம் வாங்கிய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருக்கும் அவரின் சாரதிக்கும் விளக்கமறியல்

14

அம்பாறை(Ampara) – அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெற இலஞ்சம் வாங்கிய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளரையும் அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தின் கடமையாற்றிவரும் பணிப்பாளர் தனது காணிக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி பெறுவதற்காக 2 இலச்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான கடந்த புதன்கிழமை (12) அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்பாசன காரியாலயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மாறு வேடத்தில் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு நீர்ப்பாசன பணிப்பாளர் கோரிய பணத்துடன் குறித்த நபர் பணிப்பாளரின் வாகன சாரதியுடன் சென்று இலஞ்சமாக கோரிய 2 இலச்சம் ரூபா பணத்தை பணிப்பாளரிடம் வழங்கும் போது அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்(13) முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை (14 நாட்கள்) விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.