தற்போது உள்ளூர் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (wasantha samarasinghe)ஒப்புக்கொண்டுள்ளார், அத்துடன் இந்த நெருக்கடிக்கு முன்னாள் அரசாங்கமே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அரசாங்கம் தலா ஒருவருக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகித்ததன் விளைவாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இன்று(08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
சிவப்பு அரிசியை உட்கொள்ளாத பொதுமக்களுக்கு ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)தலைமையிலான அரசாங்கம் சிவப்பு அரிசியை விநியோகித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் சந்தைக்கு தொடர்ந்து அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையில் சிவப்பு அரிசி தட்டுப்பாடு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.