வாகன இறக்குமதிச் செயற்பாட்டின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாது என்று மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) உத்தரவாதமளித்துள்ளார்
தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது.
கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும், அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேணவும், அவசியமான மீள்செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் முடியும்.
பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடையக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.