தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், எதிர்வரும் 7ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோருடன் கலந்துரையாடி அந்தச் சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வரும் காலத்தில் அரசால் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் போது, குறைந்த பட்சம் அந்த விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோரைக் கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கஜேந்திரகுமாரிடம் வினவியபோது, எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அன்றைய தினம் சிறீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் மீண்டும் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவித்தார்.
அதனூடாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அந்தத் தீர்வுத் திட்ட வரைவு குறித்து ஆழமாக ஆராயவும், கலந்துரையாடவும் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.