வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசின் மகிழ்ச்சி தகவல்

0 14

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம்.

உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் புலம்பெயர்ந்தோர் அதேபோல் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி வாழ்பவர்களின் உரிமைகளுக்காகவே சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் போது புலம்பெயர்ந்தோர் அந்நிய செலாவணி ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்திருந்தால் நெருக்கடி மேலும் தீவிரமடைந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறும் 3 பில்லியன் டொலர்களை காட்டிலும் புலம்பெயர்ந்து வாழும், தொழில் புரியும் எமது உறவுகளிடமிருந்து அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பல்களின் பெறுமதி 4.48 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.

மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் சற்று பின்னடைவு காணப்பட்டாலும், ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பண அனுப்பலின் பெறுமதி 5,961.6 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இவர்களை மதிக்க வேண்டும். அவர்களின் உழைப்புக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும்.

வாகன இறக்குமதியின் போது வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு விசேட சலுகை வழங்கப்படும் என்று கடந்த அரசாங்கம் குறிப்பிட்டது.

இருப்பினும் இதனூடாகவும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான முறையில் தென்கொரியாவுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு பதிலாக E – 8 முறைமை ஊடாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனால் பல சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன.இவ்விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.