வடக்கை உலுக்கும் எலிக் காய்ச்சல் : விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல்

17

வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் (S. Vaseegaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – திருநெல்வேலியில் (Tirunelveli) உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19.12.2024) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பாக்டீரியாக்கள் வாழும். எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவானது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து பரவ வாய்ப்புள்ளது.

மழைக் காலங்களில் குடி நீர்க்கிணறுகளில் கூட தொற்றுக் கிருமிகள் கலக்கக்கூடும். தொற்றடைந்த நீரைப் பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் இந்த பாக்றீரியாக்கள் உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது.

இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளன. குறித்த லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் பாற்றீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளில் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.