கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்தார்.
எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மக்கள் வாக்களித்தனர்.
இதை விடுத்து, எம்.பிக்களின் கல்வித்தகைமைகளை பரீட்சித்தல், விவாதித்தல் செயற்பாடுகளே அண்மைக்காலமாக இந்த பத்தாவது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலை நீடித்தால், அரசாங்கம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். எனவே, ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுங்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கும் நல்ல பண்புகள், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களிடமும் இருக்க வேண்டும்.
159 எம்.பிக்களை வைத்திருக்கும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால், கோட்டாபயவுக்கு ஏற்பட்ட இழி நிலையே ஏற்படும். 147 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் துரத்தியடிக்கப்பட்டது ஏன்?
அகம்பாவம் மற்றும் ஆணவத்துடன் நடந்ததால், இன்று மூன்று எம்.பிக்கள் தெரிவாகுமளவுக்கு அவர்கள் இழிவு படுத்தப்பட்டனர்.
கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும்.
இது தொடர்பில், சுகாதார அமைச்சர் நேற்று வழங்கிய பதிலில் எமக்குத் திருப்தி இல்லை. மக்களால் தெரிவானவர்கள் என்ற உரிமையுடனேயே இவ்விடயத்தைக் கோருகின்றோம்.
எமது மதத்தை நிந்தித்த கோட்டாவுக்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே அவரது ஆட்சிக் கவிழ்ப்பை நோக்குகின்றோம்.
இதுவே எமது நம்பிக்கை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. எனவே, சிறுபான்மைச் சமூகங்களை சிறுமைப்படுத்தும் இழி செயலைச் செய்ய வேண்டாம் என்றார்.