நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும்.
இதனை வலியுறுத்தும் வகையிலேயே கடந்த தேர்தல் முடிவுகள் அமைந்தன. எனவே, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றம் இடம்பெறவேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடக்க வேண்டும் என நானும் வலியுறுத்துகின்றேன்.
புதிய மாற்றமொன்றை நாம் மக்களுக்கு காட்டியாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள அரசுடன் அரசியல் சமரில் வெல்வது சவாலாக அமையும்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி உடைவதை நாம் விரும்பவில்லை. அதனால்தான் கலந்துரையாடல் மூலம் தேசியப்பட்டியல் பிரச்சினையைத் தீர்த்தோம் என தெரிவித்துள்ளார்.