நீண்ட காலமாக அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் சுமார் 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் கடமைகள் தொடர்பான மீள் பயிற்சிகளை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்புப்பிரிவில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான அதிகாரிகள் அமைச்சர் அல்லது எம்.பிக்களின் தனிப்பட்ட விடயங்களை கடமைக்கு மேலதிகமாக செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர்களின் வீடுகளிலும், அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்காகவும் நீண்ட நாட்களாக பொலிஸ் பணியை செய்யாமல் பணிபுரிந்து வருவதால், குறித்த அதிகாரிகளுக்கு பொலிஸ் பணிகள் குறித்த தெளிவு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு, பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றில் கடமையாற்றிய பெருமளவிலான அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, பொலிஸ் நிலையங்களின் பணிகளில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் கடமைகளில் மீள் பயிற்சி வழங்குவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளது.
Comments are closed.