சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

7

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்காக HPV தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

களுத்துறையில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 5 மாணவிகளுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வயிற்று வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கியதன் பின்னர், அவர்கள் குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் போது ஏற்படும் அச்சம் காரணமாகச் சிறுவர்களுக்கு சிறு மயக்க நிலை போன்ற குறுகிய காலப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், முறையான நடைமுறையின் கீழ், சுகாதார அமைச்சு இதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இலங்கையில் பெண்களிடையே காணப்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒன்று என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதை தடுப்பதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான வழி HPV தடுப்பூசியாகும், மேலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது, மேலும் உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே HPV தடுப்பூசி தொடர்பில் நம்பிக்கையைப் பேணுமாறும் சுகாதார அமைச்சு பெற்றோர்களை கேட்டுக்கொள்கின்றது.

Comments are closed.