தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayaka) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) இடையில் இடம்பெறவுள்ள விவாதத்தில் சஜித் பிரேமதாச கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு தேசிய மக்கள் சக்தி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
குறித்த விவாதமானது, இன்று (06.05.2024) இரவு 10.00 மணியளவில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) ஒளிபரப்புடன் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இந்த தொலைக்காட்சி விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரத் தயார் என சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் சுதர்ஷன குணவர்தன கடந்த ஜூன் 04ஆம் திகதி இரு தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்திருந்தார்.
இதற்கமைய, இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவின் மூலம் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, “இது சாதாரண தொலைக்காட்சி உரையாடல் அல்ல, ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விவாதம் என்பதால், சஜித் பிரேமதாச இதில் பங்கேற்பாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என நளிந்த ஜயதிஸ்ஸ சு.தொ.சேவைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்று இரவு இடம்பெறவுள்ள விவாதமானது நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளதற்கு பல இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சு.தொ.சேவையின் தலைவர் சுதர்சன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Comments are closed.