சஜித் பிரேமதாசவை பிரதமராக்கியே தீருவோம்: இராதாகிருஷ்ணன் உறுதி

5

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்றே தீருவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“இன்று பலரும் பல சின்னங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு எமது சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இது எமது இனத்திற்கு செய்கின்ற ஒரு சாபக்கேடாகும். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்கள் சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாத்து கொள்வதற்காகவும் எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து கொள்வதற்காகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, கண்டி, பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பலமான ஒரு அணியாக நாம் இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.