கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி அரசாங்கம் மிகவும் மோசமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் (Kanakaratnam Sukhas) தெரிவித்துள்ளார்.
அராலியில் (Araly) வைத்து நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜே.வி.பி, என்.பி.பியுடைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) , தமிழ் மக்களுக்கு சார்பாக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளையோ, போர் குற்ற விசாரணைகளையோ அல்லது இனப்படுகொலை விசாரணைகளையோ நாங்கள் முன்னெடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
இது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் ஜே.வி.பிக்கும், என்.பி.பிக்கும் பின்னால் செல்லுகின்ற தமிழர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
ஜே.வி.பியினுடைய கடந்தகால செயற்பாடுளை எமது மக்கள் மிகத் தெளிவாக உணர வேண்டும். இல்லாவிட்டால் பானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக தமிழர்களுடைய எதிர்காலம் சூனியம் ஆகிவிடும்.
சந்திரிகாவின் ஆட்சியிலே சந்திரிகாவினுடைய (Chandrika Kumaratunga) பங்காளிகளாக இருந்து தமிழர்களை அழித்தொழிப்பதற்கு துணை நின்ற காட்சி தான் ஜே.வி.பி. யுத்தத்தினுடைய இறுதிக் கட்டத்திலே முள்ளிவாய்க்காலில் நிலப்பரப்பு குறைந்த சிறிய பகுதிக்குள் 4 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் சுருங்கியிருந்தவேளை, கனரக ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று மகிந்தவின் அரசுக்கு அழுத்தத்தை வழங்கியது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் குறுகிய நிலப்பரப்புக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும் என்று மகிந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கொழும்பில் (Colombo) போராட்டம் செய்தது இந்த ஜே.வி.பி.
இந்த ஜே.வி.பியின் அழுத்தத்தினால் மகிந்த அரசாங்கம் மிக கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை தாக்கி அழித்தொழித்து இனப்படுகொலையை முன்னெடுத்தமை வரலாறு.
அதைவிட, தமிழர்களுடைய தாயகம் எனப்படுகின்ற இணைந்த வடக்கு கிழக்கினை பிரிப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பிரித்த ஒரு கட்சிதான் ஜே.வி.பி.
தமிழர்கள் தமது இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றை ஆட்சியையோ அல்லது மாகாண சபை முறைகளையோ ஏற்று கொள்ளவில்லை, அவற்றின் நிராகரித்துள்ளார்கள்.ஆனால் ஜே.வி.பியானது தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை முறைகள் கூட இலங்கையில் இருக்கக் கூடாது என சொல்கின்றது. ஏனென்றால் அதிலும் கொஞ்ச அதிகாரிகள் இருக்கின்றனவாம்.
ஒற்றையாட்சி என்ற பெயரில் யாப்பு இருக்கக் கூடாதாம். ஏனென்றால் ஒற்றையாட்சி என்ற பெயரில் இருந்தால் பிரித்தானியாவில் (United Kingdom) இருப்பதுபோல ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்கள் கொடுப்பட்டு விடக்கூடிய அபாயம் இருப்பதாக ஜே.வி.பி கூறுகின்றது.
ஆகையால் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி எவ்வளவு பயங்கரமானவர்கள் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் ஜே.வி.பி, என்.பி.பி அரசாங்கத்திற்கும் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களுக்கும் இடையில் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது.
அவர்கள் கொழுக்கட்டை என்றால் இவர்கள் மோதகம். ஆகையால் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Comments are closed.