வெளிநாடு சென்றுள்ள குழந்தை சத்திரசிகிச்சை நிபுணரை கைது செய்ய உத்தரவு

7

வெளிநாடு சென்றுள்ள கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் நவீன் விஜேகோனை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெகுணாவெல உத்தரவிட்டுள்ளார்.

இவர் சத்திர சிகிச்சை செய்த மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், குழந்தையின் மரணம் குற்றமாக நிரூபிக்கப்பட்டால், முதலில் சாட்சியாக பெயரிடப்பட்ட வைத்தியரை சந்தேக நபராகப் பட்டியலிட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சத்திரசிகிச்சை நிபுணர் நவீன் விஜேகோன், பிரேத பரிசோதனை விசாரணையில் சாட்சியமளிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் 22ஆம் திகதியன்று கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்றின் செயல்படாத இடது சிறுநீரகத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு, வலது சிறுநீரகமும் செயலிழந்ததால் குழந்தை உயிரிழந்தது.

இந்தநிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து ஸ்கைப் ஊடாக வைத்திய நிபுணர் விஜேகோன் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், கடந்த செவ்வாய்கிழமை அவர் சாட்சியமளிக்கவில்லை.

இதன்படி, அவர் சாட்சியமளிக்கும் தமது கடப்பாட்டைத் தவிர்த்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

Comments are closed.