கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 08.20 மணியளவில், இந்தக் குழுவின் முதலாவது பங்களாதேஷ் பிரஜை கட்டாரின் தோஹா நோக்கிப் புறப்படவுள்ள கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-655 இல் ஏறுவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் செர்பிய விசா இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயணியிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களுடன் குடிவரவுத் துறையின் எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில் செர்பிய விசா மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு இந்த விமானத்திற்கு உதவிய பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய, அவரை கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது மேலும் 06 பங்களாதேஷ் பிரஜைகள் நீர்கொழும்பு விடுதி ஒன்றில் சேர்பியா செல்வதற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருந்த நீர்கொழும்பு விடுதியை சுற்றிவளைத்து, குழுவைக் கைது செய்து, குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Comments are closed.