பன்றி இறைச்சி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

7

பன்றி இறைச்சி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகள் சிலவற்றில் வேகமாக வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், இவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைரஸினால் இறக்கும் இறக்குமதி பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்து, சந்தையில் கிலோ ஒன்று 300 முதல் 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஜாஎல பிரதேச சபையில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சுற்றாடல் மற்றும் வசதிகள் குழு கலந்துரையாடலின் போது, ததுகம பிரதேசத்தில் பன்றி பண்ணைகளில் பன்றிகள் உயிரிழந்தமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள பன்றிப் பண்ணைகளில் தினமும் சுமார் 50 பன்றிகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விலங்குகளின் இறைச்சி குறைந்த விலைக்கு மனித நுகர்வுக்கு விற்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பன்றிப் பண்ணைகளில் பன்றிகளுக்குள் வைரஸ் தொற்று பரவி வருவதாக அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் சிறுநீர், உமிழ்நீர் துளிகள் போன்றவற்றின் மூலம் பன்றிகளுக்கு பரவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், நுரையீரல் செயலிழப்பு, காய்ச்சல், பசியின்மை போன்றவை இந்த வைரஸை தொற்று தாக்கியதன் பின்னர் ஏற்படும் அறிகுறிகளாகும் என தெரிவித்துள்ளார்.

கருவுற்ற கால்நடைகளுக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய கழிவு உணவுகள் தீவனமாக பன்றி பண்ணைகளுக்கு கொண்டு செல்வதால் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த வைரஸ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான விலங்குகளையே மக்கள் இறைச்சியாக நுகர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நோய்களினால் உயிரிழந்த விலங்குகளின் இறைச்சியை மக்கள் நுகர்வதனை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.