வலுக்கும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு புடின் திடீர் விஜயம்

7

மத்தியக்கிழக்கு போர் காரணமாக பதற்றம் மூண்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு நாடுகளை எதிர்க்கும் வல்லமையை உக்ரைனுக்கு எதிரான போரின் மூலம் சர்வதேசத்துக்கு எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மத்தியகிழக்கில் அமெரிக்க ஆதரவு நாடான இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பாரிய தாக்குதலை தொடுத்துள்ள நிலையில் புடினின் இந்த விஜயம் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பில் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிப்பார் என்று ரஷ்ய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தானில் இந்த சந்திப்பானது இடம்பெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நகர்வு இருதரப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்கும், நிச்சயமாக, மத்திய கிழக்கில் கடுமையாக மோசமடைந்துள்ள சூழ்நிலையைப் பற்றி விவாதிப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கொல்லப்பட்டிருந்தார்.

இதற்கு எதிராக ஈரான் பாரிய பதிலடியை இஸ்ரேலை நோக்கி நகர்த்தியிருந்தது.

இன்றுவரை ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வித நகர்வையும் முன்னெடுக்காத நிலையில் புடின் ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை பெரும் எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.

Comments are closed.