ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை சுட்டுக் கொன்ற பொலிஸார்

12

வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான ஐஸ்லாந்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவக் கரடி ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கரடியினால் உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில், தனியாக இருந்த வயதான பெண்மணி ஒருவரை துருவக் கரடி அச்சுறுத்தி உள்ளது.

இதையடுத்து, அவர் வீட்டின் மேல் பகுதிக்குச் சென்று பூட்டிக் கொண்டுள்ளார்.

பின்னர் தொலைபேசி மூலம் விவரத்தை வயதான பெண்மணி தன் மகளிடம் தெரிவித்ததன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வயதான பெண்மணியை பாதுகாப்பதற்காக கரடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அத்துடன், துருவக் கரடி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் விருப்பம் இல்லை என்றும் சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஹெல்கி ஜென்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துருவக் கரடிகள் ஐஸ்லாந்தில் அதிகம் தென்படுவதில்லை என்பதுடன் கிரீன்லாந்தில் இருந்து பனி பாறைகள் உருகி நகரும் போதே துருவக் கரடிகளும் ஐஸ்லாந்தை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு ஐஸ்லாந்தில் முதல் முறையாக தென்பட்ட துருவக் கரடியே சுட்டு கொல்லப்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்த துருவக் கரடி சுமார் 150 முதல் 200 கிலோ வரை எடை கொண்டுள்ளதாகவும் ஆய்வுக்காக அதன் உடல் ஐஸ்லாந்திய இயற்கை வரலாற்று நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அதன் தோல் மற்றும் எலும்புகள் சேகரித்து வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.