காஸாவில் தொடரும் போருக்கு எதிராக, பொதுமக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு மாலத்தீவில் இனி இஸ்ரேலிய மக்களுக்கு அனுமதியில்லை என அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சட்டங்களை திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு துணைக்குழுவை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் நிதி திரட்டும் பொருட்டும் ஜனாதிபதி மொஹமத் முய்சு விசேட தூதுவரை நியமிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Oren Marmorstein தெரிவிக்கையில், இஸ்ரேலிய மக்கள் கண்டிப்பாக மாலத்தீவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும்,
முடிவான பயண திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலிய கடவுச்சீட்டுடன் தற்போது மாலத்தீவில் தங்கியிருக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் மாலத்தீவுக்கு 11,000 இஸ்ரேலிய பயணிகள் விஜயம் செய்துள்ளனர். ஆனால் போருக்கு பின்னர் இஸ்ரேலிய மக்கள் சுற்றுலாவுக்கு திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
Comments are closed.